இன்று தேதி 7.31.13[இங்கே அமெரிக்காவில் தேதியை நடுவில்தான் எழுதுவது வழக்கம் ]நேரம் இரவு 10.34[நல்லவேளைநிமிடத்தை முன்னாடி போடாம விட்டாங்க ! ]
ஜன்னலுக்கு வெளியே ...சாலையில் பறந்துக் கொண்டிருக்கும் கார்களின் அணிவகுப்பைப் போன்றே கணினி கற்பதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நினைவிற்கு அணியணியாய் வருகிறது ...e மெயிலைக் கண்டுபிடித்த திரு .அய்யாதுரை அவர்களின் ஐந்து கம்பெனிகளில் ஒன்றான ...[வெள்ளை மாளிகைக்கு ஆலோசனை சொல்லும் ]முக்கிய நிறுவனத்தில் ,உயர்ந்த பதவியில் இருந்தாலும் ... ஆரம்பகால என் அனுபவங்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது !
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பை முடித்த நேரம் ...வரக்கூடாத ஆசைன்னு சொல்ல முடியாது ...முன்னேறத் துடிக்கும் இளைஞனுக்கு வர வேண்டிய ஆசை எனக்கும் வந்தது ...கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள வேண்டுங்கிற ஆசைதான் !
அப்போது இருந்த அண்ணாநகரில் bsc ஷோ ரூம் அருகில் ...csc சென்டரின் 'இலவச கம்ப்யூட்டர் ட்ரைனிங் 'போர்டு என்னை அழைத்துக் கொண்டே இருந்ததால் ,,,உள்ளே சென்றேன் .
எதிர் காலத்தில் பில்கேட்ஸ் அளவிற்கு வருவேங்கிற பொலிவை என் முகத்தில் பார்த்த மாதிரி வரவேற்பு பலமாக இருந்தது .
''ட்ரைனிங் டீடைல் வேணும் !''
''மூணுமாசம் ப்ரீ கோர்ஸ் .ஸ்டடி மெட்டீரியல்ஸ் நீங்க வாங்கிக்கணும் ''
''ரொம்ப சந்தோசம் ,அதுக்கு எவ்வளவு செலவாகும் ?''
''ஆக்சுவலா அதோட விலை ஐந்தாயிரம் ரூபாய் ,ஆனா எங்களுக்கு சென்ட்ரல் கவர்ன்மெண்டில் இருந்து எய்ட் வர்றனாலே நீங்க 3000 ரூபாய் கொடுத்தா போதும் ''
300 ரூபாய்க்கே எங்கள் வீட்டில் வசதி இல்லை 3000 ரூபாய்க்கு எங்கே போறது ?இருந்தாலும் கம்ப்யூட்டர் கல்விமேல் இருத்த மோகம் குறையவில்லை ...அந்த மோகம்தான் மாதமானால் 30000டாலர் சம்பாதிக்கும் சீட்டில் இன்று உட்கார வைத்திருக்கிறது !
அடுத்து கண்ணில் பட்டது ஒரு பிட் நோட்டிஸ் ,,,அதில் 'கம்ப்யூட்டர் பேசிக் கற்க 100ரூபாய் மட்டுமே 'என்றிருந்தது ,,அட்ரசைப் பார்த்தேன் .சுமார் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் காளவாசல் பகுதி..ஆர்வக் கோளாறில் சைக்கிளை மிதி மிதியென்று மிதித்து சென்று விசாரித்தேன் ...
''100 ரூபாய் கட்டிட்டு காலை 6 to 7 பாட்ஜில் சேர்ந்துக்குங்க ''
''நான் அண்ணா நகரில் இருந்து வருகிறேன் 9 to 10 பாட்ஜில் சேர்ந்துக்கிறேனே !''
''அது லேடீஸ் பாட்ஜ் ஆச்சே ''என்றார்களோ இல்லையோ ,எனக்கு கற்கும் ஆசையே போய்விட்டது .இத்தனை வருஷம் பசங்களோட மட்டுமே படித்து காய்ஞ்சுக் கிடக்கேன் ..இவங்க என்னடான்னா ,லேடீஸ் தனி கிளாசாமே ?அன்று ...கன்னியர்கள் இன்றி கணினி கற்க மனம் வரவில்லை .இன்று ,,,நியூ யார்க் அருகில் நோவார்க் நகரில் பல நாட்டு பெண்களுடன் பணிபுரியும் வண்ணமயமான வாய்ப்பு !
அப்புறம் ,கீழவாசல் அருகில் 'எல்லாமே ப்ரீ 'என்று ஆசை காட்டி அழைத்ததால் சென்றேன் .
அங்கே ,அவர்கள் கேட்ட முதல் கேள்வி ...''என்ன டைப் படிப்பு விரும்புகிறீங்க ?''
கனவுக் கன்னிகளுக்கு அடுத்த படியாக ஓவியர் ஜெயராஜின் கைவண்ணத்தில் உருவான கவர்ச்சிக் கன்னிகள் என் மனதில் ஒத்தியோ ,வாடகையோ தராமல் குடியிருந்த நேரம் !
''அனிமல்நேசன் படிக்கலாம்ன்னு இருக்கேன் ;ன்னு சொன்னதும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள் ...எனக்கு அவமானமாக இருந்தது ...[அன்று பட்ட அவமானம்தான் இன்று என்னை usa கொண்டுவந்து சேர்த்து இருப்பது தனிக் கதை ]
''அனிமல்நேசன் இல்லை ,அனிமேசன் ...அதை கத்துக்க வருசக் கணக்காகுமே !''
நான் அவமானப்பட்ட இடத்தில் படிக்க மனம் வரவில்லை ...இன்றுவரை அந்த சென்டர் பக்கம் தலை வச்சும் படுக்கலே !
அப்புறம் ...SSLC ல் நான் எடுத்த மார்க்கைப் பார்த்து KLN ஐ டி கல்லூரியில் 'எங்க காலேஜுக்கின்னு ஒரு மரியாதை இருக்கு'என்று கைவிரித்து விட்டார்கள் .
பிறகு ,சென்னை தாம்பாளம் அருகில் மூன்றாந்தர கல்லூரியில் Bsc CS ஒருவழியாக படித்துவிட்டு 'மதுரை பாத்திமா கல்லூரியில் MCA பர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்ததும் .காம்பஸ் செலக்ட் ஆனதும் ,பெங்களூரு இன்பொடெக்கில் பணி புரிந்ததும் ,என் திறமை கண்டு திரு அய்யாத்துரை அழைத்ததும் ,திரு .நாராயண மூர்த்தி 'நீ அங்கே இருக்க வேண்டிய ஆள் 'என்று வாழ்த்தி வழி அனுப்பியதையும் ...இப்போ நினைச்சாலும் கனவு மாதிரியே இருக்கிறது !
கனவு மாதிரியென்னா கனவேதான் என்பதை தெரிவித்துக் கொண்டு என் புருடாவை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் ...
பல பதிவர்கள் கணினி அனுபவத்தை எழுதி இருப்பதை படித்து நானும் பில்ட் அப் செய்து எழுதியதுதான் இதுவரை நீங்கள் படித்தது ,அதையெல்லாம் டெலிட் செய்து விடுங்கள் ...இனிமேலே படிக்கப் போறதுதான் 'கணினி என் முதல் அனுபவம் '!
கம்ப்யூட்டர் படிப்பு எல்லாம் நம்ம ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே என் படிப்புக் காலம் முடிந்து விட்டது ...டைப்பிங்கூட கற்றதில்லை !
ஆனந்த விகடன் ,குமுதம் .தினமலர் வாரமலர் போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு கதை ,ஜோக் எழுதிக் கொண்டிருந்த எனக்கு என் மகன் அஜய் சந்தன் வலைப்பூவை உருவாக்கிக் கொடுத்தான் ...டைப் அடிப்பதில் நானும் 'ஒருவிரல் கிருஷ்ணா ராவ் 'ஆகத்தான் இருந்தேன் ,இப்போது பிக்கப் ஆகி நாலு விரல்கள் கில்லாடிகளாக வேலை செய்கின்றன !
தந்தைக்கு மந்திரம் சொன்னவன் கந்தன் என்று புராணக் கதை உண்டு ...எனக்கு கம்ப்யூட்டர் கற்று தந்தவன் மகன் அஜய் சந்தன் தான் !அவனுக்கு ஆங்கிலம் ;ஹிந்தியும் தான் அத்துப்படி ...அவனுடைய ப்ளாக் http://ajeyscomputerblog.blogspot.in/ விரும்பினால் படித்துப் பாருங்கள் !என் பதிவுகளை நானேதான் டைப்படித்து ஒட்டிக் கொண்டு இருக்கிறேன் ,,,நுணுக்கமான விஷயங்களை அவன் செய்து தருவான் ,அதுக்கு மேலும் ,நண்பர்கள் திரு ,திண்டுக்கல் தனபாலன் ,தமிழ்வாசி பிரகாஷ் போன்றவர்கள் உதவுகிறார்கள் !
எல்லாம் சரி ,தலைப்புக்கு விளக்கம் சொல்லுங்க என்று கேட்பது புரிகிறது ...ஒண்ணுமில்லைங்க ,என் வீட்டில் இருப்பது ஒரேஒரு கம்ப்யூட்டர் தான் !என் மனைவி ,இரண்டு பையன்கள் 'மற்றும் என்னிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது !
'வீட்டிற்கு வந்தால் என்னைக் கூட கண்டுக்க மாட்டேங்கிறீங்க ,நான் பெண்டாட்டியா ,கம்ப்யூட்டர் பெண்டாட்டியா''ன்னு என்னவள் கோபித்துக் கொள்கிறாள் ...
''உனக்கான இடம் என்னைக்கும் பறி போகாது ,வேணும்னா லேப்டாப் ஒண்ணை வாங்கி சின்னவீடா வச்சிக்கிறேன்.பெரிய வீடா எப்பவும் நீயே இருக்கலாம்''ன்னு சொன்னதற்கு
கொள்கை அளவில் ஒப்புதல் தந்து இருக்கிறாள் என்னவள் !
நாட்டுலே வழங்கப் பட்டுவரும் விலையில்லா மடிக்கணணி ஒன்று ,என் மடியிலும் தவழ கூகுள் ஆண்டவர்தான் அருள் புரியணும் !
நல்லவேளை மப்பும் மந்தாரமுமாக இருங்கனு சொல்லாமே போனாரே...
எல்லா மனைவிமார்களுமா ?
என்ன கொடும சரவணா !