27 June 2014

தினசரி இங்கே குத்தாட்டம்தானா ?

                             வட இந்திய டூர் - பாகம் 1
 அண்மையில் வட இந்தியச் சுற்றுலா  சென்றபோது,   நம் நாட்டையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோடுஅமைந்து இருக்கும் ஊரான வாகா பார்டர் போய் பார்க்கலாமே என்று டெல்லியில் இருந்து கிளம்பினோம் .அங்கே என்ன விசேசம் என்றால்...எல்லைப் பாதுகாப்பு படையினர் தினசரி நடத்தும்  கொடியிறக்க நிகழ்ச்சிதான் !
       எங்கள் வாகனம் நெடுஞ்சாலையில் உள்ள  ஒரு டோல் கேட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது,பின்னால் அவசர கால சைரன் ஒலியுடன் வேகமாக வந்தது ஒரு கார் ..அது கடந்து செல்ல அங்கிருந்த காவல் துறையினர் டோல் கேட்டில் ஒரு வழியை ஏற்படுத்தினார்கள் .யாரோ ஒரு VIP செல்கிறார் போலிருக்கிறது நினைத்து பார்த்தால் .அந்த எஸ்கார்ட் வண்டிக்கு பின் ஒரு வால்வோ பஸ்,அதற்கு பின்னாலும் ஒரு எஸ்கார்ட் கார் .இவ்வளவு பாதுகாப்பும் அந்த பஸ்சிற்கு! ஏனென்றால் ,அது டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு செல்லும் பஸ்!இடையில் அந்த பஸ் எங்கேயும் நிற்காதாம்!வாகா கேட்டில் இறக்கி விடப்படும் பயணிகள் ,அங்கு தயாராக இருக்கும் பாகிஸ்தான் பஸ்ஸில் லாகூர் செல்வார்களாம்!
         நாங்கள் கொடிஇறக்க நிகழ்ச்சி நடைபெறும் வாகா பார்டர் சென்று சேர்ந்தோம்.அங்கே பார்த்தால் ஒரு ஊரே திரண்டது போல் கூட்டம் அலை மோதிக்கொண்டு இருந்தது .நாலரை மணி வாக்கில் கேட்டை திறந்தார்கள் .ஒரு ஒழுங்கு இல்லாமல் மக்கள் அடித்து பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் .மெடல் டிடெக்டர் செக் அப் முடிந்த பின் ,பார்வையாளர் மாடத்தில் போய் அமரலாம் என்று பார்த்தால் முடிய வில்லை .சுமார் இருபதாயிரம் பேரை கொள்ளக்கூடிய இடத்தில் முப்பதாயிரம் பேருக்கு மேற்பட்டோர் கூடி  இருந்தனர் !
     எல்லைப் பாதுகாப்பு படையினர் அங்கே வரும்  மக்களை ஆரம்பத்தில் இருந்தே வரிசையாக ஒழுங்குபடுத்தி அமரவைத்தால் நல்லது .இல்லையென்றால் எதிர்காலத்தில்  விரும்பத்தகாத விளைவுகள்  ஏற்படலாம் ,இந்த விசயத்தில் BSFஅதிக கவனம் செலுத்தினால் நல்லது !
         பார்வையாளர் மாடம் முழுவதும் ஆர்வத்துடன் மனித தலைகள் .நிகழ்ச்சி தொடங்கியது .மாடத்தின் முன் உள்ள இடத்தில் ,பெண் குழந்தைகளை அழைத்து நமது தேசீயக் கொடியை கொடுத்து சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு ஓடச் சொன்னார்கள் .பெருமை பொங்க கொடியை பறக்க விட்டு கொண்டே ஓடினார்கள் ,ஓடினார்கள் ,நம் தேசத்த்தின் எல்லைக்கே ஓடினார்கள் !
பிறகு தேசபக்தி பாடல்கள் முழங்கியது ,விரும்பமுள்ள பெண்கள் ,குழந்தைகள்  ஆடலாம் என்று அனுமதிக்கப் பட்டார்கள் .துள்ளல் இசையுடன் வந்த பாட்டிற்கு பெண்கள் ஆடினார்கள் ,ஆடினார்கள் ,சினிமா குத்து ஆட்டம்கூட தோற்றுவிடும் அப்படி ஆட்டம் போட்டார்கள் !அதைப் பார்த்த எனக்கே இடுப்பு சுளுக்கிக் கொண்டு விடும் போலிருந்தது  !  ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் !  
         ஒலி பரப்பான தேசபக்தி பாடல்கள் எல்லாமே ஹிந்தி பாடல்கள்தான் .இந்திய நாடு என் வீடு என்று தொடங்கும் நம் பாடலைப் போட்டால் நன்றாய் இருக்குமே என்று எனக்கு பட்டது .அது இந்த 'ஹிந்தி'ய 'நாட்டில் எங்கே நிறைவேறப் போகிறது ?
        பிறகு ,BSF படை வீரர்கள் உரத்த கமென்டுடன்,கம்பீர நடை போட்டார்கள் கொடி மரத்தை நோக்கி !தலைக்கு மேலே காலை தூக்கி அவர்கள் கொடி வணக்கம் செலுத்தியது நன்றாய் இருந்தது ! பாரத் மாதாக்கி ஜெய் என்று நம் மக்கள் உணர்ச்சி பெருக்குடன் கோஷம்போட்டு தங்களின்  தேச பக்தியை நிருபீத்தார்கள் !
             இந்தியா என்று பெயர் பொறிக்கப்பட்டு  அழகாய் காட்சி தரும் கேட் திறக்கப் பட்டு ,அங்கு ஏற்றப் பட்டிருக்கும் நமது மூவர்ணக் கொடி,தேசீயக் கீதம் முழங்க இறககப் படுகிறது ,இதே போன்று பாகிஸ்தான் தரப்பிலும் நிகழ்ச்சி நடத்தப் பட்டு இருநாட்டு கொடிகளும் ஒரே நேரத்தில் கொடிஇறக்கம் நடத்தப்படுகிறது .      நம் நாட்டுதரப்பில்,  பார்வையாளர்கள் கூட்டத்தால் மாடங்கள் நிரம்பி வழிகின்றன .ஆனால் .பாகிஸ்தான் தரப்பில் பார்வையாளர்கள் நூறு பேர்கள் 
கூட இல்லை ,இதை பெருமை பொங்க சொல்லிக் கொண்டு நம்மவர்கள் தங்களின் தேச பக்தியை வெளிப் படுத்தினார்கள் .தீவிர தேச பக்தர்கள் வந்தே மாதரம் என்ற போது மற்றவர்களும் அதை திருப்பி சொன்னார்கள் .பாகிஸ்தான் டவுன் டவுன் என்று ஒருவர் கோஷம் போட்டபோது, யாரும் அதை திருப்பி சொல்லாதது எனக்கு மகிழ்ச்சியை தந்தது !
    அங்கே எடுக்கப் பட்ட சில புகைப் படங்கள் ,இதோ உங்கள் பார்வைக்கு ......



                                                                            பயணம் தொடரும் ....

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

நன்றி மறக்காத டாக்டர் !

''டாக்டர் அறையிலே நன்கொடை கொடுத்தவங்கன்னு  நிறைய போட்டோ இருக்கே ,அவங்க எல்லாம் யாரு ?''
''அவங்க டாக்டர் பண்ண ஆப்ரசனுக்கு காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம் பண்ணவங்களாச்சே !''




'சிரி'கவிதை!

தொப்பைக்கு 'goodbye 'எப்போது ?

தொப்பை விநாயகர் சிலைகூட ...
கடலில் உடனே கரைந்து விடுகிறது !
கடற்கரை ஓரத்தில் வேர்க்க வேர்க்க ஓடுபவர்களின் 
தொப்பைதான் கரைவதாக தெரியவில்லை !
















    
     

26 comments:

  1. துள்ளல் இசையுடன் வந்த பாட்டிற்கு பெண்கள் ஆடினார்கள் ,ஆடினார்கள் ,சினிமா குத்து ஆட்டம்கூட தோற்றுவிடும் அப்படி ஆட்டம் போட்டார்கள் !அதைப் பார்த்த எனக்கே இடுப்பு சுளுக்கிக் கொண்டு விடும் போலிருந்தது
    அது எப்படி ? பகவான்ஜீ ஆட்டத்தை பார்த்தாகூட இடுப்பு சுளுக்குமா ?
    விநாயகர் கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. மெட்ராஸ் ஐ வந்தவங்க கண்களைப் பார்த்தால் நமக்கும் அது தொற்றிக் கொள்ளுமே ,அது மாதிரிதான் இந்த சுளுக்கும் !சுளுக்கு வர்ற அளவிற்கு ஏன் அந்த இடத்திலே கண்ணு போச்சுன்னு எல்லாம் கேட்கக்கூடாது !
      நன்றி

      Delete
  2. மூன்றுமே அசத்தல்..

    தொப்பை விநாயகரை
    வயிற்றில் அடித்து அடித்து
    கரைத்து விடுகிறார்கள்
    மனிதப்புழுக்கள்
    ஓடி ஓடி
    களைத்துத்தான் போகிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. திருடனா பார்த்து திருந்தினால்தான் உண்டுங்கிற மாதிரி தொப்பையாப் பார்த்து கரைந்தால்தான் உண்டுன்னு சொல்லலாமா ?
      நன்றி

      Delete
  3. தேச பக்தியை உணர்ந்தீர்களா ஜி...?!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா ...ஆனால் ஒன்று,இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஹிந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப் படுவதால் வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது !செம்மொழியான தமிழ் மொழிக்கும் வாய்ப்பு தந்தால் தேசீய ஒருமைப் பாடு கூடும்னு தோன்றுகிறது !
      நன்றி

      Delete
  4. சுவாரஸ்யமான பயணக்கட்டுரைத் துவக்கம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சுவாரசியமா இருப்பதாக நீங்கள் சொல்வதால் தொடர்கிறேன் ரமணி ஜி !
      நன்றி

      Delete
  5. கேள்விப் பட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். முரளி - சிம்ரன் நடித்த ஒரு படத்தில் கூட இந்தக் காட்சி இடம்பெறும்.

    ReplyDelete
    Replies
    1. அநேகமாய் அந்த படத்தின் பெயர் ...கனவே கலையாதே என நினைக்கிறேன் !வாகா பார்டரில் ஆட சிம்ரன் மிகவும் பொருத்தமானவர்தான் !
      நன்றி

      Delete
  6. கொடி மரத்தை நோக்கி !தலைக்கு மேலே காலை தூக்கி அவர்கள் கொடி வணக்கம் செலுத்தியது நன்றாய் இருக்கும்..ஜீ

    ReplyDelete
    Replies
    1. அந்த நிகழ்ச்சியின் பிரபலமே அதுதானே ?
      நன்றி

      Delete
  7. பயணக்கட்டுரை இனிதே தேசபக்தியுடன் ஆரம்பித்திருக்கிறது பாஸ்!
    வாகா கேட் பற்றி நானும் கேள்விப்பட்டு youtube பார்த்தேன். நேரவே பார்க்க இன்னும் சூப்பரா இருந்திருக்கும்ல? கட்டுரையில் தெறிக்கும் நகைச்சுவை அட்டகாசம்:) கூடவே BSF கு வழங்கிய அட்வைசில் பொறுப்பும் தெரிகிறது:))

    ReplyDelete
    Replies
    1. பலரும் குழந்தைகளுடன் அந்த கூட்டத்தில் மிகவும் கஷ்டப் பட்டு கொண்டிருந்தார்கள் ..கட்டுக் கடங்காத கூட்டம் சரியாக கண்காணிக்கவில்லை என்றால் தீவிரவாதிகள் புகுந்து கை வரிசையைக் காட்டவும் வாய்ப்புண்டு என்பதே என் கவலை !
      நன்றி

      Delete
  8. வட இந்திய பயணத்தை தேசபக்தியோடு தொடங்கியது சிறப்பு. தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஓ...இப்படி ஓர் கோணமும் இருக்கிறதா ?
      நன்றி

      Delete
  9. பயணப் பதிவு நன்று
    தொப்பையும்
    நன்கொடையும்
    சிந்திக்க வைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வைத்தால் நல்லதுதானே ?
      நன்றி

      Delete
  10. பகவான் ஜீ, பயனத்தொடரா, தொடருங்கள், தொடருங்கள், மகிழ்ச்சி, நாங்களும் தொடர்கிறோம்.

    உங்களுக்கு தொப்பை குறைந்தவுடனே, அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பயணத்தில் தொடர்ந்து வருவதற்கு நன்றி !

      ரகசியத்தை உங்களுக்கு சொல்ல முடியாதே ,எனக்கு தொப்பை இருந்தால்தானே ?
      நன்றி

      Delete
  11. வாகா எல்லை நிகழ்ச்சிகள் எப்போதுமே ஒரு தனிச்சிறப்பு பெற்றது தான். விடுமுறை காலத்தில் அங்கே மக்கள் அதிகம் இருப்பார்கள். பொதுவாகவே இந்தியர்கள் வரும் அளவு பாகிஸ்தான் நாட்டவர்கள் வருவதில்லை.

    ஹிந்தி பாடல்கள் மட்டுமே அதிக அளவில் இங்கே ஒலிக்கப்படுவதன் காரணம் இந்த இடத்தில் ஹிந்தி/பஞ்சாபி தான் மொழி. இங்கே தமிழ் பாடல் ஒலித்தால் சுற்றுலா வருகிற தமிழர்கள் தவிர வேறு யாருக்கும் புரியாதே..... பிறகு நாட்டில் உள்ள எல்லா மொழி பாடல்களும் ஒலிபரப்ப வேண்டுகோள் வரும்! அதிலும் அரசியல் புகும்.

    ReplyDelete
    Replies
    1. அரசியல் வரும் என்பது உண்மைதான் ,நமது மத்திய அரசால் தேசீய மொழிகள் என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கும் மொழிகளை எல்லாம் இணைத்து ,நம்ம A Rரகுமானிடம் கொடுத்து இசை அமைக்கச் சொன்னால் ஜெய்ஹோ பாடலைப் போன்று போன்று தூள் பரப்பி விடுவாரே ...அப்படிப்பட்ட பலமொழிப்பாடல்களை இப்படிப்பட்ட இடங்களில் ஒலிபரப்பினால் தேச பக்தி கூடத்தானே செய்யும் ?இந்த மாதிரி நல்ல விஷயங்களை மத்திய அரசு செய்ய வேண்டும் !
      நன்றி

      Delete
  12. பயணக்கட்டுரை அருமை ஜி! ஜோக்காளி ஜோக்குகள் மட்டுமல்லாமல், கவிதை, கட்டுரை என்று அசத்துகின்றார் போங்கள்!
    இந்திய எல்லை வரை சென்று வந்துள்ளீர்கள்.....எங்களுக்கும் அந்த நிகழ்வைப் பார்க்க மிகவும் ஆவல்! தாங்கள் அதை இன்னும் கூட்டி விட்டீர்கள் ஜி! நாங்கள் நினைத்தோம் எல்லை என்றால் ஏதோ ஒரு கேட், முள் வேலிக் கம்பி...மின்சாரக் கம்பி போன்று இருக்கும் வெட்டவெளியாக......ஆனால் தங்கள் புகைப்படத்தைப் பார்த்தால்....மிகவும் அழகாக இருக்கின்றது! நாங்களும் சொல்ல நினைத்தோம்...எல்லா மாநிலப் பாடல்களும் ஒலிபரப்பலாமே...அட் லீஸ்ட் இரு வரிகள்...என்று...ஆனால் நண்பர் வெங்கட் அவர்கள் சொல்லியிருப்பது ....அதிலும் அரசியல் புகும் என்பது சிந்த்திக்க வைக்கின்றது!..

    மிக்க நன்றி ஜி பகிர்வுக்கு!

    சிரி கவிதை....ஹாஹஹாஅ......சிரித்து சிரித்து மாளவில்லை! ஜி! செம கவிஜோக்!

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு நான் சொல்லி இருக்கும் ஆலோசனை சரிதானே ?

      தொப் byeக்கு குட் BYE சொன்னால் நல்லதுதானே ?
      நன்றி

      Delete
  13. பாகிஸ்தான் ஒழிக என்று கத்தியவருக்கு ஆதரவாக யாரும் கூச்சலிடவில்லை என்பதைப் படிக்கையில் பெருமிதமாக உணர்ந்தேன். நம்மவ(இந்தியர்)களின் தேசப்பற்றுக்கு ஒரு சல்யூட், அனுபவங்களை எளிமையான நடையில் நல்லாவே எழுதியிருக்கீங்க. அப்பப்ப இந்த மாதிரி சரக்கையும் எடுததுவுடு தலைவா...

    ReplyDelete
    Replies
    1. நியாயம் தெரிந்த யாரும் யாரையும் 'ஒழிக' வென்று சொல்ல மாட்டார்களே !

      இதுக்கு அப்புறமும் இந்த வரிசையில் இரண்டு பதிவை எடுத்து விட்டிருக்கேன் ,படிச்சிட்டு உங்க கருத்தை எடுத்து விடுங்க தலைவா !
      நன்றி

      Delete